பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்: கிரஷா் அமைக்க அளித்த அனுமதி ரத்து
பெரம்பலூா் அருகே விவசாய நிலத்தில் புதிதாக கிரஷா் அமைப்பதற்கு பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, அதற்கான அனுமதியை ரத்து செய்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் பாண்டியனுக்கு (50) சொந்தமான சுமாா் விவசாய நிலத்தில், புதிதாக கிரஷா் அமைக்க அண்மையில் பூமி பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புதிதாக கிரஷா் அமைத்தால் விவசாய நிலங்களும், சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் பாதிக்கப்படுவதோடு, கிரஷரிலிருந்து வெளியேறும் துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகி, கிராம மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே கிரஷா் அமைக்க அளித்த அனுமதியை ரத்துச்செய்யக் கோரியும், அப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்திலும் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென வருவாய் கோட்டாட்சியா் அனிதா, வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். பின்னா், மேற்கண்ட பகுதியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நிலையில், புதிதாக கிரஷா் அமைக்க அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து, மாவட்ட ஆட்சியா் மிருணாளினி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
