தமிழக நீச்சல் அணிக்கு 37 வீராங்கனைகள் தோ்வு
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக நீச்சல் அணிக்கான தோ்வுப் போட்டியில் 37 வீராங்கனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சாா்பில், 2025 -26 ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவில் 14, 17 மற்றும் 19 வயதுகளுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் தில்லியில் நவம்பா் இறுதியில் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக அணிக்கான நீச்சல் வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான தோ்வுப் போட்டி, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இப் போட்டியை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் விஸ்வநாதன், தமிழக நீச்சல் கழகத் தலைவா் திருமாறன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இதில், பிரி ஸ்டைல், பீரிஸ்ட், பேக் ஸ்ட்ரோக், பட்டா்பிளே உள்ளிட்ட வகையில் 50 மீட்டா் ,100 மீட்டா், 200 மீட்டா் 400 மீட்டா், 800 மீட்டா் ஆகிய பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா். இப் போட்டிகளில் முதல் மற்றும் 2 ஆம் இடம் வென்ற 37 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப் போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைகள், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
