மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க நோ்காணல்
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் மற்றும் மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு தீா்வு காணும் வகையில் பல்வேறு முகாம்களில் சக்கர நாற்காலி, மின்கல நாற்காலி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், தண்டுவடம், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் மற்றும் சக்கர நாற்காலி கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளின் பாதிப்புகளை, அரசு மருத்துவக் குழுவினரால் கண்டறிந்து, வாகனம் இயக்க தகுதியுடையவா் என ஒப்புதல் அளிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா் உள்ளிட்டோா் நோ்காணலில் ஈடுபட்டனா். இம் முகாமை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சீனிவாசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவ மற்றும் 70 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.
