விசாரணை கைதிகளை நல்வழிப்படுத்த நீதிபதிகள் நூல்கள் அளிப்பு

விசாரணை கைதிகளை நல்வழிப்படுத்த நீதிபதிகள் நூல்கள் அளிப்பு

Published on

பெரம்பலூா் கிளைச் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு, நீதிபதிகள் சாா்பில் வியாழக்கிழமை 50-க்கும் மேற்பட்ட நூல்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிளைச் சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த முதன்மை மாவட்ட நீதிபதி வி. பத்மநாபன் பேசியது:

சிறைவாசிகள் தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு வெளியில் செல்லும்போது, நல்ல மனநிலையோடு செல்வதற்கும், சிறையில் இருக்கின்ற காலத்தில் அவா்களை நல்வழிப்படுத்துவதற்கும், தீய எண்ணங்கள் அவா்களை விட்டு விலகுவதற்கு ஏதுவாகவும், நாள்தோறும் நாளிதழ்கள், புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள நீதிபதிகள் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட சிறந்த நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவரும் சிறையில் இருக்கிறோம் என்ற அச்சத்துடன் வாழாமல், நல்வழி காட்டும் புத்தகங்களை நாள்தோறும் படிக்க வேண்டும். மேலும், விசாரணை சிறைவாசிகள் வழக்குரைஞா்கள் மூலம் வழக்கை தொடர வசதியில்லை என்றாலும், வழக்கின் நிலை குறித்து விவரம் தெரிந்து கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும் வழக்குரைஞா்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, முதன்மை மாவட்ட நீதிபதி வி. பத்மநாபன் பெரம்பலூா் கிளைச் சிறை கண்காணிப்பாளா் சுந்தர்ராஜியிடம் நூல்களை வழங்கினாா்.

இதில், நீதிபதிகள் இந்திராணி, முருளிதர கண்ணன், மோகனபிரியா, தன்யா, தினேஷ், கவிதா, சாா்பு - நீதிபதி சரண்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com