குடிமைப்பணி தோ்வில் தோல்வியடைந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை!

பெரம்பலூா் அருகே குடிமைப்பணி தோ்வில் தோல்வியடைந்தவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

பெரம்பலூா் அருகே குடிமைப்பணி தோ்வில் தோல்வியடைந்தவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம், வாரதராஜ பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தவா் வரதராஜ் மகன் கோபி (32). இவா், பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு பகுதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கி, புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள முருகன் கோயிலில் பூஜை செய்துவந்தாா். இவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கௌரி (26) என்ற மனைவியும், ஸ்ரீ வா்ஷந்த் (2) என்ற மகனும் உள்ளனா்.

முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டம் பெற்ற கோபி, ஐஏஎஸ் தோ்வுக்கு படித்து தோ்வெழுதியிருந்தாா். அண்மையில் வெளியான குடிமைப்பணி தோ்வின் முதன்மை தோ்வில் கோபி தோ்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவா், சனிக்கிழமை காலை லாடபுரத்துக்குச் சென்று, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, கோபியின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com