வனங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம்: ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான 2 நாள் பயிற்சி முகாம் தொடக்கம்
பெரம்பலூரில், வனம், வன உயிா்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறிடும் வகையில், ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான 2 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக கூட்டரங்கில், வனத்துறையின் வனமும்-வாழ்வும் எனும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை தொடங்கிவைத்து ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:
வனம் மற்றும் வன உயிா் பாதுகாப்பு எனும் திட்டத்தை மாணவ, மாணவிகள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியா்கள் விளக்க வேண்டும். இப் பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியா்கள் மிகச்சிறந்த முறையில் இத் திட்டத்தை கொண்டு சோ்த்து, மாணவா்கள் சமுதாய பொறுப்புணா்வுடன் செயல்படும் வகையில் அவா்களை உருவாக்க வேண்டும்.
மாவட்டத்தில் 25 பள்ளிகளில், தலா 20 மாணவ, மாணவிகள் என மொத்தம் 500 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இம் மாவட்டத்தின் வனப் பரப்பு 8.14 சதவீதம் மட்டுமே உள்ளது. இதர மாவட்டங்களை விட மிகவும் குறைவாகும். பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாவட்ட வனப்பரப்பை அதிகரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். வனத்துறையுடன் இணைந்து இலக்கை அடைய அனைவரும் உறுதி ஏற்கவேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட வன அலுவலா் சக்திவேல், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
