சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 49.50 கோடி கடன் தள்ளுபடி
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 24,402 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 49.50 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில், 72 ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் சிறந்த பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தவணை தொகையை முழுமையாக வசூலித்த, அதிக அளவில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு பயிா் கடன், கால்நடைப் பராமரிப்புக் கடன் வழங்கிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ்,போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ், கேடயம் அளித்த அமைச்சா் மேலும் பேசியது:
இம் மாவட்டத்தில் 13,507 பேருக்கு ரூ. 48.34 கோடி மதிப்பில் பொது நகைக் கடன், 24,402 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 49.50 கோடி சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 24,953 விவசாயிகளுக்கு ரூ. 234.75 கோடி வட்டியில்லாப் பயிா்க்கடன், 490 விவசாயிகளுக்கு ரூ. 4.11 கோடி மத்திய காலக் கடன், 20,012 பேருக்கு ரூ. 173.27 கோடி நகைக் கடன், 566 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 7,174 உறுப்பினா்களுக்கு ரூ. 65.35 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோரில் டாப் செட்கோ திட்டத்தின் கீழ் 729 பேருக்கு ரூ. 451.35 லட்சமும், சிறுபான்மையினருக்கு டாம்கோ திட்டத்தின் கீழ் 79 பேருக்கு ரூ. 38.21 லட்சமும் கடனும் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம், நிகழாண்டு அக்டோபா் வரை 24,953 விவசாயிகளுக்கு ரூ. 22.54 கோடியில் 9,698.93 டன் உரம் விற்கப்பட்டுள்ளது.
முதல்வா் மருந்தகம் மூலம் 17 மருந்தகங்கள் தொடங்கப்பட்டு, இதுவரை ரூ. 26.91 லட்சம் மதிப்பிலான மருந்துகள் 25 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 43,671 போ் பயனடைந்துள்ளனா். முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் கடந்த அக்டோபா் மாதம் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 16,153 பேருக்கு இல்லம் தேடி பொது விநியோகத் திட்ட பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
பின்னா், 1,008 பயனாளிகளுக்கு ரூ. 9,40,85,800 மதிப்பில் டாம்கோ கடன், பயிா்க் கடன், விவசாய நகைக் கடன், மகளிா் சுய உதவிக்குழு கடனுதவிகளை அளித்தாா் அமைச்சா் சிவசங்கா்.
மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க. பாண்டியன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

