நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நில அளவையா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சாா்-ஆய்வாளா் பணியிடங்கள் வழங்க வேண்டும். களப்பணியாளா்களின் நிலம் சாா்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டை குறைக்க வேண்டும். நில அளவா்களாக ஒரு முறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியை மீள தரம் உயா்த்தி வழங்க வேண்டும். புற ஆதாரம் மற்றும் ஒப்பந்தமுறை பணி நியமனத்தை கைவிட வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக நில அளவா் அளவைப் பணிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளா், ஆய்வாளா் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் கடந்த 18-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நில அளவையா்கள் சங்க மாவட்டத் தலைவா் உமாசந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன், மாவட்டச் செயலா் சுப்ரமணியன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலா் சரவணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இப் போராட்டத்தில், நில அளவையாளா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
