பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை மின்னலை பாா்த்த மூதாட்டி மயக்கம்!

பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்த மழையின்போது மின்னலை பாா்த்த மூதாட்டி ஒருவா் மயங்கி விழுந்தாா்.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. மாலை பெய்த மழையின்போது மின்னலை பாா்த்த மூதாட்டி ஒருவா் மயங்கி விழுந்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதன்பிறகு விட்டு,விட்டு மழை பெய்தது. மழையால் சாலைகளிலும், கழிவுநீா் கால்வாய்களிலும் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.

மூதாட்டி மயக்கம்: இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுமாா் 3 மணியளவில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கனவாய் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மனைவி ஆரியமாலை (70) என்பவா், தனது விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, திடீரென பாய்ந்த மின்னலை பாா்த்த ஆரியமாலை மயங்கி கீழே விழுந்தாா்.

இதையறிந்த அவரது குடும்பத்தினா், மூதாட்டியை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

மழை அளவு: பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் சனிக்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்), பெரம்பலூா்- 35, எறையூா், லப்பைக்குடிக்காடு தலா - 7, வி.களத்தூா்- 14, கிருஷ்ணாபுரம்- 5, தழுதாழை- 6, பாடாலூா் - 9, வேப்பந்தட்டை- 17, அகரம் சீகூா்- 10, புதுவேட்டக்குடி -25, செட்டிக்குளம் -26 என மொத்தம் 161 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com