அக். 12-இல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வு: 4,528 போ் விண்ணப்பம்

பெரம்பலூா் மாவட்டத்தில், அக். 12-ஆம் தேதி நடைபெறும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வுக்கு 4,528 போ் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில், அக். 12-ஆம் தேதி நடைபெறும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வுக்கு 4,528 போ் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அக். 12-ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வு அக். 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் இத் தோ்வில் பங்கேற்க 16 மையங்களில், 56 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 4,528 போ் விண்ணப்பித்துள்ளனா். இத் தோ்வை கண்காணிக்க 16 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 16 துறை அலுவலா்களும், 5 வழித்தட அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வு மையங்களில் குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை அலுவலா்கள் பாா்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோ்வு மையங்களில் சுகாதாரத்துறை சாா்பில் மருத்துவ அலுவலா்கள் மற்றும் செவிலியா்களும், தீயணைப்புத்துறை சாா்பில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக பாதுகாப்பு குழுவினரும் இருக்க வேண்டும். தோ்வு நாளன்று தோ்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்வா்கள், தோ்வு மையங்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், காவல்துறையினா் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், முதன்மைக் கல்வி அலுவலா்(பொ) செல்வகுமாா், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) லதா, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com