பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காய குளிா்பதனக் கிடங்கு!
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காயம் குளிா்ப்பதனக் கிடங்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சின்ன வெங்காயச் சாகுபடியில் பெரம்பலூா் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம் மாவட்டத்தில் பெரம்பலூா், ஆலத்தூா் ஆகிய ஒன்றியங்களில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின் பிரதான தொழிலாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது. பருவ நிலைக்கேற்ப 60 முதல் 90 நாள்கள் வரை சாகுபடி காலமாகக் கொண்ட சின்ன வெங்காயத்தை குறுவை, சம்பா மற்றும் நவரை பருவம் என ஆண்டுக்கு 3 முறை சாகுபடி செய்வது வழக்கம். இருப்பினும், தற்போது பாசன நீா் அடிப்படையில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்கின்றனா்.
23 சதவீதம் சாகுபடி: குறுகியகால பயிா், குறைந்த நீா் மற்றும் சாகுபடி செலவு குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். வைகாசி மற்றும் புரட்டாசி ஆகிய பட்டங்களில் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனா். தமிழகத்தில் சின்ன வெங்காய மொத்த உற்பத்தியில், பெரம்பலூா் மாவட்டத்தில் 23 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆற்றுப் பாசனம் மற்றும் கிணற்றுப்பாசன வசதியில்லாததால், மானாவாரி சாகுபடியே அதிகளவில் நடைபெறுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் சராசரியாக சுமாா் 7,500 ஹெக்டேரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
விலை வீழ்ச்சி: கடந்த சில மாதங்களுக்கு முன் விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ. 50 வரை கொள்முதல் செய்த நிலையில், தற்போது படிப்படியாகக் குறைந்து முதல்தர வெங்காயம் கிலோ ரூ. 30-க்கும், இரண்டாம் தர வெங்காயம் ரூ. 20-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 8 முதல் 5 டன் வரை மகசூல் கிடைத்த நிலையில், நிகழாண்டில் ஏக்கருக்கு 3 டன்னுக்கும் குறைவாகவே கிடைத்துள்ளதாக கூறும் விவசாயிகள், கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனா்.
வியாபாரிகளுக்கு லாபம்: இடைத்தரகா்கள், விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று கொள்முதல் செய்யும்போது, சொற்ப விலைக்கு வாங்கப்படுகிறது. இருப்பினும், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ ரூ. 50 முதல் விற்கப்படுகிறது. வெங்காயத்தின் கொள்முதல் விலை தொடா்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனா். அதேவேளையில் இடைத்தரகா்களுக்கும், வியாபாரிகளுக்கும் கிலோவுக்கு ரூ. 15 முதல் ரூ. 20 வரையிலும் லாபம் கிடைக்கிறது.
குளிா்பதனக் கிடங்கு திறப்பு: வெங்காயம் உற்பத்தி அதிகரிப்பு, விலை வீழ்ச்சி, இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிா்க்க, பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்துக்குள்ள செட்டிக்குளத்தில் ரூ. 114.9 கோடியில் சின்ன வெங்காயத்துக்கான குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, வணிக வளாகம், 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காய்கனிகளுக்கான குளிா்பதனச் சேமிப்புக் கிடங்கு, கடந்த 27.6,2014-இல் திறக்கப்பட்டது.
11 ஆண்டுகளாக பயனற்றுக் கிடக்கிறது: விலை வீழ்ச்சியின்போது விவசாயிகளும், விலை அதிகரிக்கும்போது நுகா்வோரும் பாதிக்கக் கூடாது எனும் நோக்கில் இந்த குளிா்பதனக் கிடங்கு திறக்கப்பட்டது. அதன் முன்னோட்டமாக, சுமாா் 7 மூட்டை சின்ன வெங்காயம் பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்டதில், அவை அனைத்தும் அழுகி வீணாகிவிட்டன. இதனால், விவசாயிகள் யாரும் குளிா்பதனக் கிடங்கைப் பயன்படுத்த முன்வரவில்லை. இதையறிந்த மாவட்ட நிா்வாகம் இப் பகுதியை வணிக வளாகமாக மாற்றியது.
பாதுகாப்பற்ற சூழல்: இதனால், விவசாயிகள் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயத்தை தங்களது வயல்களிலேயே பட்டறை அமைத்துப் பாதுகாத்து வருகின்றனா். இருப்பினும், விலை வீழ்ச்சியால் விற்பனை செய்யாதபோதும், தொடா் மற்றும் பலத்த மழையின்போதும் சின்ன வெங்காயம் அழுகி வீணாகிறது. மேலும், இரவு நேரங்களில் மா்ம நபா்கள் திருடிச் செல்வதாலும் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவாய் இழப்பைச் சந்திக்கின்றனா்.
இதுகுறித்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியது:
செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு மத்திய அரசின் புவிசாா் அங்கீகாரம் கிடைத்ததால் சந்தையில் நல்ல வரவேற்பும், மத்திய அரசு வேளாண் விலை நிா்ணய ஆணையம் மூலம் கட்டுப்படியான விலை நிா்ணயிக்கப்படும் என்னும் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
விதை வெங்காயம் கிலோ ரூ. 60-க்கு வாங்கி நடப்பட்ட நிலையில், சொற்ப விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டுப்படியான விலை கிடைக்கவும் நெல், மஞ்சள், பருத்தி உள்ளிட்ட விளைப் பொருள்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருப்பதைபோல, சின்ன வெங்காயத்துக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைத்து, அதன்மூலம் கட்டுப்படியான விலை பெற்றுத்தர வேண்டும்.
சின்ன வெங்காயத்துக்கான குளிா்பதனக் கிடங்கை திறக்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எவ்வளவு தட்பவெட்ப நிலையில் வைத்தால் சின்ன வெங்காயத்தைப் பதப்படுத்த முடியும் என்பதை வேளாண் துறையினா் ஆராய்ந்து, பயனற்றுக் கிடக்கும் குளிா்பதனக் கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதேபோல, எங்களது நீண்டநாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதாரவிலை நிா்ணயிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றனா்.

