கோயில் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு
பெரம்பலூா் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள கோயிலின் பூட்டை உடைத்து, உள்ளேயிருந்த பூஜைப் பொருள்கள் மற்றும் காணிக்கையை மா்ம நபா்கள் திருடிசென்றது சனிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டம், துறைமங்கலத்தில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலக வளாகத்தில் சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிகள் கோயில் உள்ளது. இக் கோயிலை தீயணைப்பு நிலைய தலைமைக் காவலா் இன்பராஜ் (47) பராமரித்து வருகிறாா். இவா், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு கோயிலை பூட்டிவிட்டு சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது ஒரு அடி உயரமுள்ள பித்தளை வேல், விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களையும், உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கையும் மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இன்பராஜா அளித்த புகாரின்பேரில், பெரம்பலுா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
