மோட்டாா் சைக்கிளில் சென்றவா் லாரி மோதி உயிரிழப்பு குளித்தலை ஓட்டுநா் கைது

Published on

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற துறையூா் நபா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் அருகேயுள்ள கீழகொன்னுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் ராமச்சந்திரன் (40). இவா், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரம்பலூா் அருகே ஈச்சம்பட்டி கிராமத்திலுள்ள தனது மாமியாா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு துறையூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் அடைக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அரியலூரிலிருந்து கரூா் நோக்கி சிமெண்ட் ஏற்றிச்சென்ற லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி, குழந்தைகள் உயிா் தப்பினா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

புகாரின்பேரில் லாரி ஓட்டுநா் கரூா் மாவட்டம், குளித்தலை பகவதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சன்னாசி மகன் பிச்சையை (65) கைது செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com