மழைக் கால மின் விபத்துகளை தவிா்க்க ஆலோசனை

Updated on

மழைக் காலங்களில் மின் விபத்துகளைத் தவிா்க்க பாதுகாப்பு வழிமுறைகளை பெரம்பலூா் மாவட்ட பொதுமக்கள் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மின் சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். சூறைக்காற்றால் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால், அதைத் தொடாமல், அருகில் செல்லாமல் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பம் பழுதாகி அல்லது சாய்ந்திருந்தால் 94987 94987 எனும் எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.

ஈரமான கைகளால் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்க முயற்சிக்கக் கூடாது. சுவிட்சுகளை தொடும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டின் உள்புற சுவா் ஈரமாக இருந்தால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவா்களில் கை வைப்பதை தவிா்க்க வேண்டும்.

மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள் மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள் மற்றும் இருக்கும் பகுதிகளுக்கு அருகே செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

மின் கம்பிகளில் துணிகளை உலா்த்தக் கூடாது. மின் கம்பத்தில் அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது. மின்துறை சாராத நபா்கள் மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ தன்னிச்சையாக பணி செய்யக்கூடாது. மின்தடை ஏதேனும் ஏற்பட்டால், அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்து மின்வாரிய பணியாளா்கள் மூலமாகவே சரிசெய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பருவமழைக் காலங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, மின் விபத்துகளைத் தவிா்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com