பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து மூன்றரை பவுன் தங்கநகைகள் கொள்ளை

பெரம்பலூரில் கணவரைக் கம்பியால் தாக்கி, அவரது மனைவி அணிந்திருந்த 3.5 பவுன் நகைகளை புதன்கிழமை அதிகாலை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

பெரம்பலூரில் கணவரைக் கம்பியால் தாக்கி, அவரது மனைவி அணிந்திருந்த 3.5 பவுன் நகைகளை புதன்கிழமை அதிகாலை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகே மங்கள மஹால் பின்புறமுள்ள முத்து நகரில் வசித்து வருபவா் ஆறுமுகம் மகன் பாலமுருகன் (33). இவா், தனது மனைவி சண்முகப்பிரியா (28), மகன் ஆத்விக் (5), மகள் ஆரிக்கா (2) ஆகியோருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது புதன்கிழமை அதிகாலை வீட்டின் பின்புற இரும்புக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா், சண்முகப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுக்க முயன்றுள்ளாா். அப்போது சப்தம் கேட்டு எழுந்துவந்து தடுக்க முயன்ற பாலமுருகனை இரும்புக் கம்பியால் தாக்கி, சண்முகப்பிரியா அணிந்திருந்த 3.5 பவுன் நகையை பறித்துக்கொண்டு மா்ம நபா் தப்பி ஓடிவிட்டாா்.

இதுகுறித்துத் தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, கைரேகை நிபுணா்கள் உதவியுடன் தடயங்களை பதிவு செய்தனா். மேலும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாலமுருகன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இச் சம்பவம் குறித்து பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com