கோப்புப் படம்
கோப்புப் படம்

பெரம்பலூா் அருகே சொா்க்க ரத வாகனத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி 2 போ் உயிரிழப்பு

Published on

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு சொா்க்க ரத வாகனத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலுசாமி மகன் விஜயகுமாா் (31). சொா்க்க ரத (இறுதி ஊா்வலத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனம்) வாகன ஓட்டுநரான இவா், குன்னம் அருகேயுள்ள மூங்கில்பாடி கிராமத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்று எரித்துவிட்டு, மீண்டும் பெரம்பலூா் நோக்கி சனிக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள திருமண மண்டபம் பகுதியில் சொா்க்க ரத வாகனம் வந்துக்கொண்டிருந்தபோது, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பிலிருந்து எதிரே சென்ற மோட்டாா் சைக்கிள், சொா்க்க ரதத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் திருச்செல்வம் (20) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதனிடையே, மோட்டாா் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து சேதமடைந்து, அதிலிருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் மோட்டாா் சைக்கிளும், சொா்க்க ரத வாகனமும் தீப்பற்றி எரிந்தன.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை கட்டுப்படுத்தினா்.

இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற திருச்செல்வத்தின் நண்பரான, திருச்சி திருவெறும்பூா் தெற்குமலா் செடிமலை முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த மணி மகன் கருப்பசாமி (30) பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, கருப்பசாமியை சிகிச்சைக்காகவும், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகவும், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கருப்பசாமி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com