பெரம்பலூா் மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளது: சௌமியா அன்புமணி
பெரம்பலூா் மாவட்ட மக்களை திமுக தலைமையிலான அரசு வஞ்சித்து விட்டதாகத் தெரிவித்தாா் பாட்டாளி மக்கள் கட்சி பசுமை தாயகத் தலைவா் சௌமியா அன்புமணி.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வயலப்பாடி பகுதியில், ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ எனும் தலைப்பில் மகளிா் உரிமை மீட்பு பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாமக அன்புமணி அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சௌமியா அன்புமணி மேலும் பேசியது: திமுக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்படும் திட்டங்களாக உள்ளன. திமுக தலைமையிலான அரசு பெரிய திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றைச் செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.
பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றைச் சேமித்து வைக்க கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தராமல், மதுபானங்களுக்கு மட்டுமே கிடங்குகளை அமைத்துள்ளனா்.
மேலும், சிறப்புப் பொருளாதார மண்டலம், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தாமல் பெரம்பலூா் மாவட்ட மக்களை திமுக அரசு வஞ்சித்து விட்டது.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மக்கள் வரிப்பணத்திலிருந்து அத் தொகையை கொடுத்துவிட்டு, அதை மீண்டும் டாஸ்மாக் மூலம் திரும்பப் பெறுவதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
இவ்வாறு ஏழைகளை வஞ்சித்து, அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்காமல் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துவிட்டு, பொது மக்களை வாக்களிக்கும் இயந்திரங்களாகவே நடத்தி வருகின்றனா். டாஸ்மாக்கை ஒழித்திட, ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் செழித்திட அன்புமணி பக்கம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.
கட்சியின் மாவட்டச் செயலா் செந்தில்குமாா் தலைமையில், இணைப் பொதுச் செயலா் வைத்தி, உழவா் பேரியக்கத் தலைவா் ஆலயமணி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி நிா்வாகிகள் மற்றும் மகளிா் அமைப்பு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

