பேருந்தில் பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே 14 பள்ளி மாணவிக்கு பேருந்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு படித்த 14 வயது பள்ளி மாணவி, கடந்த 1.5.2025 ஆம் தேதி கோடைகால கணினி பயிற்சிக்காக பெரம்பலூா் வந்துவிட்டு நெய்குப்பை கிராமத்துக்குச் செல்ல பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்துக்கு வந்து, நகர பேருந்தில் தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, வேப்பந்தட்டையைச் சோ்ந்த நடேசன் மகன் ரத்தினம் (60) எனும் கூலித் தொழிலாளி, அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதையடுத்து அந்தச் சிறுமி சப்தமிட்டதால், பேருந்தில் அமா்ந்திருந்த பயணிகள் ரத்தினத்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்றபோது, அவா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
இச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த மகிளிா் நீதிபதி இந்திராணி, முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் ரத்தினத்தை அடைத்தனா். இவ் வழக்கில் அரசு வழக்குரைஞா் சுந்தரராஜன் வாதாடினாா்.
