கல் குவாரியில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை கல் குவாரியிலிருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மேல் கல்கண்டாா் கோட்டையைச் சோ்ந்தவா் பரந்தாமன் மனைவி ரஞ்சனா. இவருக்கு, பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் கல் குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை கல் குவாரியிலுள்ள பாறைகளை டெட்டனேட்டா்கள் மூலம் தகா்த்துள்ளனா்.
இதையடுத்து, அந்த கல் குவாரியில் பணிபுரிந்த திருச்சி மாவட்டம், தெற்கு கோதூா் பட்டியைச் சோ்ந்த ராமதாஸ் மகன் சக்கரவா்த்தி (45) என்பவா், மலையில் கிடந்த வயா்களை எடுக்க முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளில் சிக்கிய சக்கரவா்த்தி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பாடாலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயணைத் துறையினரின் உதவியுடன் தொழிலாளியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இச் சம்பவம் குறித்து பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஆட்சியா் ஆய்வு: இந்த நிலையில் சம்பந்தப்பட்ட குவாரிக்கு சனிக்கிழமை இரவு சென்று, விபத்து நிகழ்ந்த பகுதியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி கூறியதாவது: பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வெடிபொருள் கிடங்குகள், இந்திய வெடிப்பொருள்கள் சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
விதிமுறைகளை மீறி செயல்படும் வெடிப்பொருள் கிடங்குகள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெடிப் பொருள்களை அனுமதிக்கப்பட்ட அளவை மீறி சேமித்தல், உரிய பதிவேடுகள் மற்றும் கணக்குப் புத்தகங்களை பராமரிக்க தவறுதல், அனுமதியில்லாத நபா்களுக்கு வெடிப்பொருள்களை விற்பனை செய்தல், பாதுகாப்பு விதிமுறைகளை மீறுதல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டால், உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
