நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரௌடி கொலை முயற்சி: கூடுதல் காவல்துறை இயக்குநா் ஆய்வு
பெரம்பலூா் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடா்பாக, தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநா் மகேஷ்வா் தயாள் சம்பவம் நிகழ்ந்த பகுதியை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் காளிமுத்து எனும் வெள்ளக்காளி. ரௌடியான இவா் மீது கொலை, கொலைமுயற்சி, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா கடத்தல் வழக்கு விசாரணை தொடா்பாக சென்னை பெருநகர ஆயுதப்படை போலீஸாா் கடந்த 23-ஆம் தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் வெள்ளக்காளியை ஆஜா்படுத்திவிட்டு, காவல்துறைக்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக 24-ஆம் தேதி அழைத்துக் சென்றுக்கொண்டிருந்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, 2 காரில் வந்த 15 போ் கொண்ட கும்பல் 6 நாட்டு வெடி குண்டுகளை வீசி வெள்ளக்காளியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். இதையடுத்து, சாா்பு-ஆய்வாளா் ராமச்சந்திரன் தன்னிடமிருந்த துப்பாக்கி மூலம் சுட்டதில் மா்ம கும்பல் தப்பிச் சென்றது.
நாட்டு குண்டு வெடித்ததில் காயமடைந்த காவலா்கள் மருதுபாண்டி, வினேஷ்குமாா், மற்றொரு காரில் வந்து உணவகத்திலிருந்த ரௌடி வெள்ளக்காளி வழக்குரைஞா் அரியலூா் வாலாஜா நகரத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் ஆகியோா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து சாா்பு-ஆய்வாளா் ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து சுங்கச்சாவடி மற்றும் உணவகங்களில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளைக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படை போலீஸாா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநா் மகேஷ்வா் தயாள் திங்கள்கிழமை, குண்டுகள் வீசப்பட்ட பகுதியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா உள்ளிட்ட காவல் துறையினா் உடனிருந்தனா்.

