பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 28 பெண்கள் உள்பட 46 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கடம்பூா் கிராமத்தில் செல்வம்- பிரசாந்த் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு தனியாா் உணவகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட சைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டது. இந்நிலையில், உணவு உட்கொண்ட 9 குழந்தைகள், 28 பெண்கள் உள்பட 46 பேருக்கு புதன்கிழமை காலை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட அனைவரும் கிருஷ்ணாபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னா், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து, அரும்பாவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.