கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் தினமும் உணவில் கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் திட்ட அலுவலர் வீ.சி. சுபாஷ்காந்தி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அருகே புல்வயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் மற்றும் பொது சுகாதாரத் துறை சார்பில், பரம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சமீனாபேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், தமிழ்ப் புத்தாண்டில் கர்ப்பிணிகளுக்கான கீரை பலன்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
கர்ப்பிணிகள் தினமும் உணவில் கீரையை கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரையில் வைட்டமின்கள், தாது உப்புகள், சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளன. அதில், பொன்னாங்கன்னி கீரை, புளிச்சை கீரை, முருங்கை கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகியவற்றில் இரும்புச் சத்துக்களும், அரைக்கீரை, முருங்கை கீரை தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கவும், பசலிக்கீரை, முளைக்கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவும், கொத்தமல்லி, தூதுவளை, சுவாசம், சளி பிரச்னைகளைப் போக்கவல்லது.
மேலும், பசலி, முளைக்கீரை சிறுநீர்ப் பாதை பிரச்னைகளுக்கு அருமருந்தாகும். வல்லாரை நினைவாற்றலையும், புதினா கர்ப்பக் காலத்தில் ஏற்படக்கூடிய மயக்கம், வாந்தி பிரச்னையைத் தீர்க்கும்.
சிறுகீரை, மணத்தக்காளி, புளிச்சைகீரை, அகத்திக் கீரை வயிற்றுப் புண்ணை ஆற்றும்.மொத்தத்தில் அனைத்து கீரை வகைகளும் இதய செயல்பாட்டை சீராக்குவதோடு மலச்சிக்கலையும் தவிர்க்கும் சக்தியுடைவை. எனவே, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கர்ப்பிணிகள் ராசி பலன்கள் தெரிந்துகொள்வதை போலவே, கீரைகளின் பலன்களையும் தெரிந்துகொண்டு பிறக்கும் தமிழ்ப் (மன்மத) புத்தாண்டில் தாய், சேய் நலம் காக்க வேண்டும் என்றார். இதையொட்டி, 12 கிரகங்களை கொண்ட ராசி கட்டங்களைப்போல 12 வகையான கீரைகளைக் கொண்ட கீரை பலன்களை கர்ப்பிணிகளுக்கு சமுதாய சுகாதார செவிலியர் வள்ளியம்மை, சுகாதார செவிலியர்கள் பரமேஸ்வரி, ராமாயி, சாவித்திரி, பத்மாவதி ஆகியோர் விளக்கினர்.
முகாமில் கலந்துகொண்ட 60 கர்ப்பிணிகளை ராணியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஜான்சிராணி, தாரணி, சத்யா ஆகியோர் பரிசோதனைகள் செய்ததில் 11 பேர் அதிக கவனம் தேவைப்படுபவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.கர்ப்பிணிகளுக்கு கீரைகள் உள்ளிட்ட கர்ப்பகால மாதிரி மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மருத்துவர் முகமது அப்துல்லா முன்னிலை வகித்தார். மருத்துவர் மதியழகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.