மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற யோசனை
By விராலிமலை | Published On : 20th June 2015 03:37 AM | Last Updated : 20th June 2015 03:37 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி நிலக்கடலைச் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஆர். சதானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற நிலக்கடலை விதைப் பருப்புகளை டிரைக்கோடர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூஞ்சனக்கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதைப்புக்கு சற்று முன் கலந்து விதைக்கவேண்டும்.
ரைசோபியம் உயிர் உரத்தை ஏக்கருக்கு ஒரு பாக்கெட் வீதம் அரிசி வடிகஞ்சியுடன் கூழ்போல் கலக்கி அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைப் பருப்புகளை நன்கு கலந்து நிழலில் உலர்ந்த பின் வயலில் விதைக்க வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் தடுக்கப்பட்டு விதை முளைப்புத் திறனும் அதிகரிக்கும்.
பயிர் இடைவெளி வரிசைக்கு வரிசை 30 செ.மீ., இடைவெளியும், செடிக்குசெடி 10 செ.மீ., இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும். பயிர் எண்ணிக்கையை சரியான முறையில் பராமரித்தால்தான் கூடுதல் மகசூல் பெற முடியும்.
விதைப்பு முடிந்தவுடன் ஏக்கருக்கு 5 கிலோ நிலக்கடலை நுண்சத்தை 15 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். இதனை அடியுரமாக இடக்கூடாது. நிலக்கடலைக்கு நுண்சத்து இடுவதால் நிலக்கடலை திரட்சியாகவும், பொக்கற்றதாகவும் இருக்கும்.
நிலக்கடலை ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை ஏக்கருக்கு தலா 4 பாக்கெட்டுகள் வீதம் 10 கிலோ தொழுஉரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் இடவும்.
இதனால் காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு அளிக்கும். அதன் மூலம் 25 சதவீதம் தழைச்சத்து இடுவதை குறைத்துக் கொள்ளலாம்.
ஊடுபயிர் மானாவாரி நிலக்கடலையில் பூச்சி, நோய்களின் தாக்குதலை குறைக்க ஊடுபயிர் சாகுபடி செய்வது அவசியம். ஊடுபயிராக துவரை, உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயிர்களை 4:1 என்ற விகிதத்தில் அதாவது 4 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை ஊடுபயிர் என்ற வீதத்தில் விதைக்கவும். மேற்கண்டவாறு மானாவாரி நிலக்கடலை விதைப்புச் செய்து விவசாயிகள் கூடுதல் மகசூலும், லாபமும் பெறலாம்.