அன்னவாசலில் மை ஸ்டாம்ப் மையம் தொடக்கம்
By DIN | Published On : 01st April 2019 09:05 AM | Last Updated : 01st April 2019 09:05 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றலாத்தலத்துக்கு பெருமை சேர்க்கும்விதமாக அன்னவாசல் துணை தபால் அலுவலகத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் எனது அஞ்சல் தலை என்னும் மை ஸ்டாம்ப் மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு கோட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்துப் பேசினார். ஸ்டேட் பாங்க் வங்கி மேலாளர் பிரசன்னாவெங்கடேசன், அன்னவாசல் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை சாந்தி ஆகியோர் பேசினர்.
அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுவாதிமதுரிமா மை ஸ்டாம்ப் மையத்தை தொடங்கிவைத்துப் பேசியது: அஞ்சல் தலை பயன்படுத்தும் ஒவ்வொரு தனிநபரின் புகைப்படமும் உடனடியாக அச்சிட்டு அஞ்சல் தலையாக வழங்கப்படும். 12 அஞ்சல் தலை கொண்ட ஒரு தாள் ரூ.300-க்கு வழங்கப்படும். புகழ்பெற்ற சின்னங்கள், தலைவர்களின் படங்கள் மட்டுமே அஞ்சல் தலைகளில் இடம் பெற்றுவந்த நிலையில் பொதுமக்கள், இளைஞர்களைக் கவரும் வகையில் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அஞ்சல் சேவை மீண்டும் புத்துயிர் பெறும் என நம்புகிறோம். மாவட்டத்தின் மூன்றாவது மையமாக அன்னவாசல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்றார் அவர்.
அன்னவாசல் அஞ்சல் உதவியாளர் நித்யா வரவேற்றார். துணை அஞ்சல அலுவலர் செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.