இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

திருச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி. இளங்கோவனை ஆதரித்து புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத் துறை



புதுக்கோட்டையில் தேமுதிக ...
  திருச்சி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி. இளங்கோவனை ஆதரித்து புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், நடிகரும் இயக்குநருமான சுந்தர்ராஜன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
மக்களவைத் தொகுதிக்கான வாக்கு சேகரிப்பு செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவு பெறுவதால், இறுதிக் கட்ட பிரசாரத்தை அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை பகலில் புதுக்கோட்டையில் தொடங்கினர். புதுக்கோட்டை கீழ ராஜவீதி, மேல ராஜவீதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, மின்வாரிய அலுவலகப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
இறுதிகட்டப் பிரசாரத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், நடிகரும் இயக்குநருமான சுந்தரராஜன் ஆகியோரும் பங்கேற்று வாக்குகள் சேகரித்தனர்.  அப்போது, மாவட்ட அதிமுக செயலரும், வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே. வைரமுத்து, நகரச் செயலர் க. பாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் தேமுதிக, பாஜக, பாமக கட்சியினரும் கலந்து கொண்டனர்.


அறந்தாங்கியில் பாஜக ...

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர் நயினார்  நாகேந்திரனுக்கு ஆதரவாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
        ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணமேல்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: 
        பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மோடி அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது உறுதி. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு அனைத்து இடங்களிலும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.  மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி நடைபெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்கள் கிடைக்கும். ஆகவே வாக்குகளை வீணடிக்காமல் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்றார். 
வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேசியது: ராமநாதபுரம் தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்னையை அடியோடு தீர்த்து வைப்பேன். ராமநாதபுரத்தில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். 
நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் நலன் காக்க தனி அமைச்சகம் பனைசார்ந்த தொழில் நிறுவனங்கள்  மற்றும் கடல் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேட்பாளருடன்  பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குப்புராம், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் இராம.சேதுபதி, அதிமுக புதுகை மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மு.ராஜநாயகம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com