பொன்னமராவதியில் அதிமுக, திமுகவினர் இறுதிக்கட்ட பிரசாரம்
By DIN | Published On : 17th April 2019 05:25 AM | Last Updated : 17th April 2019 05:25 AM | அ+அ அ- |

பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை மாலை அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி தலைமையில் முக்கிய வீதிகளின் வழியே இரு சக்கரவாகனத்தில் ஊர்வலமாகச் சென்று சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜாவிற்கு வாக்குகள் சேகரித்தனர். அதிமுக ஒன்றியச் செயலர் ராம. பழனியாண்டி, நகரச் செயலர் பிஎல். ராஜேந்திரன், பாஜக நகரத் தலைவர் சேதுமலையாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இதேபோல், மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி. ப.சிதம்பரத்துக்கு அக்கட்சியினர் வாக்குகள் சேகரித்தனர். இதில், வட்டார காங்கிரஸ் தலைவர் கே.செல்வராஜன், நகரத் தலைவர் எஸ்.பழனியப்பன், திமுக ஒன்றியச் செயலர் அ.அடைக்கலமணி, நகரச்செயலர் அ.அழகப்பன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சியினர் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாகவும், கால்நடையாகவும் வந்து வாக்காளர்களைச் சந்தித்து தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி கந்தர்வகோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக கிராமம், கிராமமாகச் சென்று தங்களது வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்தனர். இதேபோல் கிராமங்களில் சிறு, சிறு குழுவாக கட்சியினர் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்கள் வீடு, வீடாக வழங்கியும், தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வாக்காளர்கள், பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தனர். இதனால் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் கூட்டம், கூட்டமாக வீதிகள்தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...