நகைக்காக தொழிலாளி கொலை: 3 பேர் கைது
By DIN | Published On : 26th April 2019 03:19 AM | Last Updated : 26th April 2019 03:19 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அண்மையில் நடைபெற்ற கொடூர கொலை வழக்கில் 3 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அறந்தாங்கி காரைக்குடி சாலையில் பஞ்சர் கடை நடத்தி வந்தவர் முருகேசன். இவர், புதுகை சாலை பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள தைலமரக்காட்டில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். போலீஸார் வழக்கு பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
கொலையானவரின் செல்பேசிக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் விசாரணையில், அறந்தாங்கி பெருமாள்பட்டி காலனியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பாலசுப்பிரமணியன்(34), அறந்தாங்கி அருகே துரையரசபுரம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் சத்தியசேகரன்(32), அதே பகுதியைச் சேர்ந்த புதுக்காலனி கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஸ்குமார்(23) ஆகிய மூவரும் நகை பணத்திற்கு ஆசைப்பட்டு முருகேசனைக் கொடூரமாகக் கொன்றுள்ளது தெரியவந்தது. அழைப்பின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த முருகேசனை மூவரும் கோடரியால் தாக்கிக் கொன்றுள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை விற்று பணத்தை பிரித்துக் கொண்டுள்ளனர்.
இதே பாணியில் தங்களுடன் வேலை பார்த்த பெயிண்டர் ராஜேந்திரன் என்பவரை கொலை செய்து விட்டு அவரது செயின், பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
அப்போது சடலம் அழுகிஇருந்தது, தடயம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் இவர்கள் பிடிபடவில்லை.
குற்றவாளிகள் மூவரையும் போலீஸார் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் மூவரும் பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.