புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15,372 விவசாயிகளுக்கு 3.50 லட்சம் தென்னங்கன்றுகள் விலையில்லாமல் வழங்கும் பணிகளை வேளாண் துறை மூலம் தொடங்கிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் 61 விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை செவ்வாய்க்கிழமை வழங்கி அவர் மேலும் பேசியது: அரிமளத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு சாய்ந்த தென்னை மரங்களை வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்ட வாடகைக் கருவிகள் மூலம் விவசாயிகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. மரங்களை அப்புறப்படுத்தும் வகையில் மரம் அறுக்கும் கருவி ஒரு மணி நேரத்திற்கு ரூ.85 க்கும், மட்டைகளை அறுக்கும் கருவி ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 க்கும் வாடகைக்கு வழங்கப்படுகிறது.
எனவே வாடகைக்கு கருவி தேவைப்படும் விவசாயிகள் தங்களது பகுதிகளில் உள்ள வேளாண் பொறியியல் துறையினரை அணுகி பயன்பெற வேண்டும். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் 15,372 பேருக்கு 3.50 லட்சம் தென்னங்கன்றுகளும், இடுபொருள்களும் விலையில்லாமல் வழங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. அரிமளத்தில் 61 விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தென்னைக்கு இடையில் பயிரிடப்படும் ஊடுபயிர்களுக்கான உயிர் உரங்கள், இடுபொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.