அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனு
By DIN | Published On : 12th February 2019 08:47 AM | Last Updated : 12th February 2019 08:47 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் போதுமான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனுக்களை அளித்தனர்.
உபயோகிப்பாளர் சமூக நலப் பாதுகாப்புக் குழுவின் உதவித் தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த மனுவில், விவேகானந்த நகரில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும், பல்லவன் ரயிலை குமாரமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் சண்முகம் அளித்த மனுவில், காமராஜ்புரம், ஆசிரியர் குடியிருப்பு, போஸ் நகர் ஆகிய பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
விராலிமலை கொடும்பாளூரைச் சேர்ந்த காந்தியவாதி செல்வராஜ் அளித்த மனுவில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றங்கள் தொடர்ந்து கண்டித்து வரும் நிலையில் சத்திரம் ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மின் இணைப்பு, பத்திரப்ப திவு உள்ளிட்டவற்றை வழங்குவதைத் தடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த சுதா அளித்த மனுவில் தங்கள் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், அதனை சரி செய்யாவிட்டால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.