""இந்தியப் பண்பாட்டை பரிமாற்றம் செய்கிறது சாகித்ய அகாதெமி''
By DIN | Published On : 12th February 2019 08:49 AM | Last Updated : 12th February 2019 08:49 AM | அ+அ அ- |

இந்தியப் பண்பாட்டை சாகித்ய அகாதெமி பரிமாற்றம் செய்கிறது என்றார் சாகித்ய அகாதெமியின் முன்னாள் உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த்துறையும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து திங்கள்கிழமை நடத்திய இலக்கிய மன்ற விழா மற்றும் சாகித்ய அகாதெமி அறிமுக நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
இலக்கியம் என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பு . இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி. இலக்கியம் மனதில் உள்ள அழுக்கையும் குப்பைகளையும் அகற்றக் கூடியது. இலக்கியம் வாழ்க்கையை வழிநடத்தும். வாழ்க்கைக்கு ஒளி பாய்ச்சும். வாழ்க்கைக்கு நம்பிக்கையை உருவாக்கும். இலக்கியம் படைக்க வாசிப்பு மிக அவசியம். வாசிப்பின் மூலமாகவே தாங்கள் படைப்புகளை உருவாக்கியதாக அதிகம் கல்வி கற்றிராத மேலாண்மை பொன்னுசாமி, ராஜநாராயணன் போன்றவர்கள் கூறுகிறார்கள்.
அந்த இலக்கியம் மூலமாக இந்தியாவின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பரிமாற்றம் செய்யும் பணியை சாகித்ய அகாதெமி செய்து கொண்டிருக்கிறது. இந்திய இலக்கியப் பண்பு கொண்ட அனைத்து மொழி இலக்கியங்களுக்கும் ஆண்டுக்கு ஒருவருக்கு விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் நூல்கள் பிற இந்திய மொழிகளுக்குப் பெயர்க்கப்படுகிறது.
இதன் வழி ஒவ்வொரு இந்தியரும் இந்திய கலாசாரத்தின் பன்முகத் தன்மையை அறிய முடிகிறது. மேலும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்ற நோக்கத்தோடு யுவபுரஷ்கார் விருதும், குழந்தை இலக்கியத்திற்கு பாலபுரஷ்கார் விருதும் வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாதெமி வெளியிடும் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை நூல்கள் விலை குறைவு. ஒவ்வொரு இலக்கியம் பயிலும் மாணவர்களும் வாசிக்க வேண்டும். வாழ்க்கையை மேம்படுத்த இலக்கியம் படியுங்கள். அன்றாடம் நீங்கள் பார்க்கின்ற, கேட்கின்ற விஷயங்களை கவிதைகளாக எழுதுங்கள்; வாழ்க்கை சிறக்கும் என்றார் அவர். கல்லூரி முதல்வர் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் சி. அமுதா வரவேற்றார். வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் அறிவுரையாற்றினார். தமிழ்த்துறை பேராசிரியர் மா.சாந்தி நன்றி கூறினார்.