அன்னவாசல் அருகேயுள்ள புலவன்பட்டி வல்லப கணபதி கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அன்னவாசல் அருகேயுள்ள புலவன்பட்டியில் வல்லப கணபதி கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு கும்பாபிஷேகம் செய்ய ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் முடிவு செய்து கும்பாபிஷேகப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், யஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் லெட்சுமி ஹோமம் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கலா கர்ஷணம். கும்ப அலங்காரம், ரஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், இரண்டாம் கால யாக வேள்வி, மூலமந்த்ர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை புலவன்பட்டி கிராமத்தினர் செய்தனர்.