புதுக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும போட்டிகள்
By DIN | Published On : 03rd July 2019 08:59 AM | Last Updated : 03rd July 2019 08:59 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பிரிவு மீமிசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட புதுக்குடி மீனவ கிராம அரசுப் பள்ளியில், கடலோர பாதுகாப்பு குழும 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
கடலோர பாதுகாப்பு குழும வெள்ளி விழா ஜூன் 29 முதல் ஜூலை 4 -ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடலோர பாதுகாப்பு, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல் வளம் பாதுகாப்பில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் பங்கு என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பா. ரகுபதி, புதுக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிஹரன் மற்றும் மீனவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.