பாதிப்பு உறுதியானால் தைல மரக்காடுகள் அழிக்கப்படும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
By DIN | Published On : 09th June 2019 12:04 AM | Last Updated : 09th June 2019 12:04 AM | அ+அ அ- |

தைல மரக்காடுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டால் அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் சார்பில் மணிப்பள்ளம் பகுதியில் 56 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள தைலமரக் காடுகளையும், முள்ளூரில் உள்ள மத்திய நாற்றங்காலில் வளர்க்கப்பட்டுள்ள தைல மரம் மற்றும் முந்திரி மரக் கன்றுகளையும் அமைச்சர் சீனிவாசன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தைல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு என்ற பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. இந்தக் கேடு உறுதி செய்யப்பட்டால் திங்கள்
கிழமை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து தைல மரங்களை அகற்றுவோம். மக்களுக்கு தீமை தரும் எந்தத் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது என்றார் சீனிவாசன்.
புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: முன்னதாக, திருச்சி, கம்பரசம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் (டாப்கார்ன்) செயல்பாடுகள் குறித்து அமைச்சர் சீனிவாசன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கையும், வனபரப்பும் அதிகரித்துள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் டாப்கார்ன் நிறுவனமானது நிகழாண்டு சிறப்பாக செயல்பட்டு நல்ல வருவாய் ஈட்டியுள்ளது. ரூ.100 கோடிக்கு வருமானம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதில், 2018-19-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.28.27 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதிகளாக இருக்க வேண்டும் என்பது பசுமைப்பரப்பின் அளவுகோலாகும்.
இதன்படி, தமிழகம் வனப்பரப்பை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் வன உயிரின கணக்கெடுப்பு நிறுவனத்தால் கடந்த 2017இல் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் 229 புலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செயற்கைகோள் மூலம் நடந்த கணக்கெடுப்பில் தமிழகத்தில் வனப்பரப்பு அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. சத்தியமங்கலம், முதுமலை வனச்சரகத்தில் அதிகளவில் புலிகள் உள்ளன என்றார் அவர்.