கந்தர்வகோட்டையில் மாடு முட்டியதில் முதியவர் சாவு
By DIN | Published On : 14th June 2019 09:22 AM | Last Updated : 14th June 2019 09:22 AM | அ+அ அ- |

கந்தர்வகோட்டையில் சாலையில் சென்ற முதியவரை வியாழக்கிழமை மாடுமுட்டி தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்து இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலிமுத்து மகன் நாராயணன்(60). இவர் கந்தர்வகோட்டை பேருந்துநிலையம் அருகில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் சுற்றி திரிந்த கோயில் காளை ஒன்று, நாராயணன் மீது முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த காளைமாடு இதற்கு முன்பும், சாலையில் சென்ற பொதுமக்கள் பலரை முட்டி காயமடைய வைத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்தக் காளையை பிடித்து தொழுவத்தில் அடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.