புதுக்கோட்டை: திருமண விழாவில் மகாராஷ்டிர முதல்வர் பங்கேற்பு
By DIN | Published On : 14th June 2019 10:03 AM | Last Updated : 14th June 2019 10:03 AM | அ+அ அ- |

மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
மும்பை சட்டப்பேரவை உறுப்பினர் கேப்டன் ஆர். தமிழ்ச்செல்வனின் மகன் திருமணம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவரது திருமணத்தில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சியிலிருந்து கார் மூலம் புதுக்கோட்டை வந்த அவரை, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, சி. விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து திருமண மேடைக்குச் சென்ற அவர், மணமகனுக்கு தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். திருமண விழாவை முடித்துக் கொண்டு மீண்டும் திருச்சிக்கு காரில் சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்துக்குப் புறப்பட்டார்.