வாராப்பூரில் பேருந்து இயக்க கோரி சாலை மறியல்
By DIN | Published On : 14th June 2019 09:21 AM | Last Updated : 14th June 2019 09:21 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வாராப்பூரில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வாராப்பூர்-புதுக்கோட்டை இடையே காலை, மாலை தலா ஒரு முறை என அரசுப்பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதில், அப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என இருவேளை இயக்கப்பட்ட பேருந்தில் பயணம் செய்து வந்தனர்.
இந்நிலையில், வாராப்பூருக்கு மாலையில் இயக்கப்பட்ட பேருந்து அண்மையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று வீடு திரும்புவோர் பெரும் சிரமத்திற்காளாகி வந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பேருந்தை இயக்க வலியுறுத்தி வாராப்பூர் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற செம்பட்டிவிடுதி போலீஸார், பேருந்தை இயக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை மக்கள் கைவிட்டனர்.