கட்செவியில் அவதூறு: கைதானோரில் 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

 கட்செவி அஞ்சலில் ஒரு சமுதாயத்தைப் பற்றி அவதூறாகப் பேசி பரப்பியதாகக் கைது செய்யப்பட்டோரில் 4 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது.
Updated on
1 min read


 கட்செவி அஞ்சலில் ஒரு சமுதாயத்தைப் பற்றி அவதூறாகப் பேசி பரப்பியதாகக் கைது செய்யப்பட்டோரில் 4 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவரைப் பற்றியும் அவரது சமூகத்தைப் பற்றியும் சிலர் இழிவாகப் பேசி, கட்செவி அஞ்சலில்  பரப்பினர். இதனால் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமூக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். 
குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் போராட்டம் வன்முறையாகவும் வெடித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், அன்பழகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 
தீவிர புலன் விசாரணையில் சிங்கப்பூரில் இருந்து கொண்டு ஆடியோ தயாரித்து கட்செவி அஞ்சலில் பரப்பியோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கடந்த 25ஆம் தேதி தொடங்கி வரிசையாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 
இவர்களில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மஞ்சவயல் கிராமத்தைச் சேர்ந்த க. செல்வகுமார் (34), பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ச. வசந்த் (30), புதுக்கோட்டை மாவட்டம் வராப்பூர் நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த சத்தியராஜ் (30), இலுப்பூர் மோசக்குடியைச் சேர்ந்த ரெங்கையா (45) ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி இந்த உத்தரவை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தார். ஏற்கெனவே திருச்சி மத்திய சிறையில் உள்ள இவர்களுக்கு குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்படும் ஆணைகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com