அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரலாம்
By DIN | Published On : 15th May 2019 08:38 AM | Last Updated : 15th May 2019 08:38 AM | அ+அ அ- |

புதுக்கோ ட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டையிலுள்ள அரசுத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு எஸ்எஸ்எல்சி முடித்த மாணவர்கள் வரும் மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியிலும், கந்தர்வக்கோட்டையிலும் அரசுத் தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இவ்விரு கல்லூரிகளிலும் எஸ்எஸ்எல்சி முடித்த மாணவர்கள் பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். அமைப்பியல் (சிவில்) இயந்திரவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணிப்பொறியியல், வணிகவியல் ஆகிய பிரிவுகளில் சேரலாம்.
மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே விடுதி வசதி உண்டு. விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், இலவச பேருந்து பயண அட்டை, சலுகைக் கட்டண ரயில் பயண அட்டை, பிசி, எம்பிசி, எஸ்ஸி, எஸ்டி மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும்.
அனைத்துத் துறைகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரமுள்ள பணிக்கூடம், ஆய்வுக் கூடங்களும் உள்ளன. வளாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது. வரும் மே 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.