அறந்தாங்கி நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பள்ளி ஆயத்த பயிற்சி மையம்
By DIN | Published On : 19th May 2019 08:54 AM | Last Updated : 19th May 2019 08:54 AM | அ+அ அ- |

அறந்தாங்கி வட்டார வளமையம் சார்பில் அறந்தாங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பள்ளி ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் கூறியது:
இம்மையத்தில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து சேர்த்து, மாற்றுத்திறன் குழந்தைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் மூலம் பயிற்சியளித்தல், மாணவர்களின் திறன்களை வளர்த்து அவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆயத்தப்படுத்துதல், பெற்றோர்களுக்கு மாற்றுத்திறன் மாணவர்களைக் கையாளத் தேவையான சிறப்பு பயிற்சி அளித்தல், மாற்றுத்தின் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் மூலம் சிறப்பான பயிற்சி தினமும் அளிக்கப்படுகிறது. பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி மற்றும் ஸ்பீச் தெரபி உள்ளிட்ட சிறப்பு பயிற்சி அளித்தல், கழுத்து நிற்பதற்கான பயிற்சி உதவி உபகரணங்களைக் கொண்டு நடைப்பயிற்சியை மேம்படுத்துதல், நுண் தசை பயிற்சிகளைக் கொண்டு அவர்களை தொழில் சார்ந்த பயிற்சிக்கு தயார்படுத்துதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
அறந்தாங்கி ஒன்றியத்துக்குட்பட்ட குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால் அறந்தாங்கி வட்டார வளமையத்திற்கு தகவல் அளிக்கவும். மாற்றுத்திறன் திறன் கொண்ட குழந்தைகளுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து அவர்களை மற்ற குழந்தைகளைப் போல நல்வாழ்வு வாழ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.