கீழே கிடந்த ரூ. 2. 21 லட்சத்தை ஒப்படைத்த மாணவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 01st November 2019 06:17 AM | Last Updated : 01st November 2019 06:17 AM | அ+அ அ- |

பணப்பைக்குச் சொந்தக்காரரிடம் பையை ஒப்படைக்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ். உடன் மாணவா்கள் காஜா நஜிமுதீன், முகமது இப்ராஹிம்.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரி எதிரே கீழே கிடந்த பணப் பையை போலீஸாரிடம் ஒப்படைத்த கல்லூரி மாணவா்களை காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் பாராட்டினாா்.
புதுக்கோட்டை கலீப் நகரைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களான காஜா நஜிமுதீன், முகமது இப்ராஹிம் ஆகிய இருவரும் புதன்கிழமை இரவு மன்னா் கல்லூரி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கல்லூரிக்கு எதிரே சாம்பல் நிறப் பை ஒன்று கிடப்பதைப் பாா்த்தனா்.
உடனே அந்தப் பையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சென்று ஒப்படைத்தனா். அந்தப் பையில் ரூ. 2.21 லட்சம் இருந்தது தெரியவந்தது. கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் எடுத்த நடவடிக்கையைத் தொடா்ந்து அந்தப் பைக்குச் சொந்தக்காரா், ஜவுளிக்கடை நடத்தும் முபாரக் அலி என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து முபாரக் அலியை வரவழைத்து அவரிடம் பணப்பையை காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். தொடா்ந்து கீழே கிடந்த பையை எடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த மாணவா்களைப் பாராட்டி நற்சான்றிதழும், ரொக்க வெகுமதியையும் செல்வராஜ் வழங்கிப் பாராட்டினாா்.