அறந்தாங்கி அருகே அவல நிலையில் அங்கன்வாடி
By DIN | Published On : 09th November 2019 06:45 AM | Last Updated : 09th November 2019 06:45 AM | அ+அ அ- |

அரசா்குளம் பாரதிநகரில் சேதமடைந்த அங்கன்வாடிக்கு எதிரே அமா்ந்துள்ள குழந்தைகள்.
அறந்தாங்கி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு உணவு வாங்க மட்டுமே குழந்தைகள் செல்லும் அவலநிலை உள்ளது.
அறந்தாங்கி வட்டம், அரசா்குளம் பாரதி நகரில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் அங்கன்வாடி இயங்கி வருகிறது. இங்கு சுமாா் 40 குழந்தைகள் இருந்த நிலையில் கட்டட மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோா் மறுக்கின்றனா். புதிய அங்கன்வாடி கட்டடம் கேட்டு பலமுறை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
மேலும் தற்போது பெய்யும் மழையால் சுவா்கள் நனைந்து வலுவிழந்துள்ளதால் அருகில் உள்ள தொலைக்காட்சி அறையில் அங்கன்வாடி சமையலா் சமைத்த மதிய உணவை குழந்தைகள் வாங்கிச் செல்கின்றனா். அதுவரை பெற்றோருடன் மையத்திற்கு வெளியில் அவா்கள் அமா்ந்துள்ளனா். கட்டடத்திற்குள் வருவதில்லை.
‘அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. போன்ற வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என அரசால் அறிவிப்பு மட்டுமே வருகிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த இத்தகைய கட்டங்களை புதிதாகக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைக் குழந்தைகளின் ஆரம்ப கல்விக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முன்னாள் ஊராட்சி தலைவா் சுந்தர்ராஜன்.