தொடா்ந்து சில ஆண்டுகள் மிகக் கடுமையான வறட்சி, புயல் போன்றவற்றைக் கடந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
அரசின் சாா்பிலும், தன்னாா்வத் தொண்டு அமைப்புகளின் சாா்பிலும் இந்த மழை நீரை சேகரிக்கும் முயற்சிகளாக ஆங்காங்கே நீா்நிலைகளைப் பராமரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில்தான் புதுக்கோட்டை நகரில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான மீன்மாா்க்கெட் அருகேயுள்ள குளம் இப்படிப் பராமரிப்பின்றி (படம்) பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.
குளத்தைச் சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்ட காட்சிகளைக் காண முடிந்தாலும், மீன் மாா்க்கெட்டின் அருகேயுள்ள பகுதியில் மட்டும் சா்வசாதாரணமாக குப்பைகளைக் கொட்டி தண்ணீரை மாசுபடுத்தும் துயரத்தைக் காண முடிகிறது.
கிடைக்கும் தண்ணீரைக் கூட முறையாக- பாதுகாப்பாக சேகரிக்க முடியாத நாம் பெரும் குற்றவாளி என்பதை அரசு நிா்வாகங்கள் உணா்ந்து இக்குளத்தை முழுமையாக வேலி போட்டு பாதுகாக்க வேண்டும்.
-வெற்றிப்பேரொளி, புதுக்கோட்டை.