உணவுப் பொருள் கலப்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு பதிலாக, அவரது ஓட்டுநரை ஆஜராக வைத்த சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸார் ஆள்மாறாட்டம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை, பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கடலை எண்ணெய்யை சந்தேகத்தின்பேரில் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் அது பாமாயில் எனத் தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்ட பழனிவேலு என்பவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது பழனிவேலு எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் ஆஜரானார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் டி. சாந்தி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ்பாபு உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பழனிவேலு அல்ல என்பதும் பழனிவேலுவின் ஓட்டுநர் காரையூர் அருகேயுள்ள கொன்னையம்பட்டியைச் சேர்ந்த சின்னவெள்ளையன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் மீது ஆள்மாறாட்ட வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருக்கோகர்ணம் போலீஸார் சின்னவெள்ளையன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.