டிஎன்பிஎஸ்சி தேர்வு: 27,168 பேர் எழுதினர்
By DIN | Published On : 02nd September 2019 05:58 AM | Last Updated : 02nd September 2019 05:58 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தொகுதி 4 - க்கான தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 27,168 பேர் பங்கேற்றுத் தேர்வெழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 -க்கான தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வினை எழுதுவதற்காக 32,159 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 90 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், 4991 பேர் தேர்வெழுத வரவில்லை. 27,168 பேர் பங்கேற்றுத் தேர்வெழுதினர். கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் டி. சாந்தி, கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் பரணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேர்வு மையக் குழப்பம்: ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் என நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டோருக்கு திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சத்தியமங்கலம் சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் தேர்வு மையம் என நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டோருக்கு பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியிலும் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டன. பல தேர்வர்களுக்கு இச்செய்தி சென்றடையவில்லை என்றபோதும், குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் சிறப்புப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு அங்கு வருவோர் குறிப்பிட்ட மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.