இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு செப்.24 வரை சிறை
By DIN | Published On : 11th September 2019 09:01 AM | Last Updated : 11th September 2019 09:01 AM | அ+அ அ- |

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை செப்டம்பர் 24 -ஆம் தேதி வரை காவலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஜெரோம், கெம்ப்லஸ், மெக்சன், ரவி உள்ளிட்ட 4 பேரும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், 4 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள், செவ்வாய்க்கிழமை ஊர்க்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன், மீனவர்களை செப்டம்பர் 24 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.