வாசகர்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்படும் விராலிமலை கிளை நூலகம்
By DIN | Published On : 11th September 2019 08:50 AM | Last Updated : 11th September 2019 08:51 AM | அ+அ அ- |

வாசகர்களிடமிருந்து பெற்ற நிதியைக் கொண்டு, விராலிமலையிலுள்ள கிளை நூலகத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் கிளை நூலகத்தில் இலக்கியம், ஆன்மிகம், தொழில், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்கள், நாவல்கள், சிறுகதை புத்தகங்கள் என ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
விராலிமலை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இளையோர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பயனை அளித்து வந்தது இந்த கிளை நூலகம்.
இந்த நிலையில் நூலகத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வாசகர் வட்டம் முடிவு செய்தது. அதன்படி வாசகர் வட்டத்தினர் அளித்த நிதியைக் கொண்டு, நூலகத்தில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து இப்பணிக்கு பெரும்பங்காற்றிய நூலக வாசகரும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவருமான ம. பூபாலன் கூறியது:
நூலகங்கள் மக்களின் கல்வி, பண்பாடு, மற்றும் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகவல் மையங்களாகும். தற்போது மாறி வரும் தகவல் தொழில்நுட்பச் சூழலில், உலகளாவிய மாற்றங்களை மக்களுக்கு உணர்த்துவதில் பெரும் பங்காற்றி வருவதுடன், வாழ்நாள் கற்றல் மற்றும் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் உன்னதப் பணியின் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றி வருகிறது கிளை நூலகங்கள். இத்தகைய கிளை நூலகத்தை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்திட வேண்டும். அதற்கு அவர்களின் பெற்றோரும், பொதுமக்களும் ஊக்கத்தை அளிக்க வேண்டும்.
இதையெல்லாம் முன்னெடுத்து புனரமைப்புப் பணிகளை வாசகர்களாகிய நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.அப்போது வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் சவுமா, கிளை நூலகர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
எல்லாவற்றுக்கும் அரசு நிதியை எதிர்பார்க்காமல், வாசகர்களே முன்னின்று இதுபோல் சமுதாயப் பணியில் அக்கறையுடன் ஈடுபடுவது பாராட்டுக்குரியதே.