இளையாத்தங்குடி நகரத்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் ஊராட்சிக்குள்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள, திருவோலக்க மண்டபம் நிர்மாணித்த
இளையாத்தங்குடி நகரத்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு
Published on
Updated on
2 min read

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் ஊராட்சிக்குள்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள, திருவோலக்க மண்டபம் நிர்மாணித்த தகவலைக் கொண்ட 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ. மணிகண்டன், தலைவர் கரு. ராஜேந்திரன் உள்ளிட்டோரைக் கொண்ட குழு கண்டுபிடித்துள்ளது.

 இக்கல்வெட்டு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியது  

இக்கல்வெட்டு பலகைக் கல்லில் முழுமையாகவும் தெளிவாகவும் உள்ளது. இரண்டே கால் அடி உயரத்துடனும் ஒன்னே கால் அடி அகலத்துடனும் சாய்ந்த நிலையில் அடிப்பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது. கல்வெட்டின் மேல்புறத்தில் தோரணவாயில் காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பொறிக்கப்பட்ட 14 வரிகள் உள்ளன.

கல்வெட்டில் காலக்குறிப்புகள் ஏதுமில்லை. எழுத்தமைதியின் அடிப்படையில் 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்க முடிகிறது.

கல்வெட்டுச் செய்தி- “ சுபமஸ்து மலையாலங்குடியில் உடையார் ஒருபூவு தந்தருளிய நாயனார் திருவோலக்க மண்டபம் கல்வாயி நாட்டுக் குலசேகரபுரத்துக்குக் கழனிவாசலுடையான் திருக்கொடுங்குன்றமுடையான் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தன்மம் சுபமஸ்து”.

ஒரு பூவு தந்தருளிய நாயனார் என்ற பெயரால் வழங்கப்பட்ட சிவாலய கட்டுமானத்தின் பகுதிகளை காண முடியவில்லை. அதுமட்டுமின்றி வழிபாட்டிலிருந்த எவ்வித சான்றுகளும் இல்லை. என்றாலும் உமையாண்டி ஊரணி பிள்ளையார் என்ற சிற்பமும் , வேல்களும் இக்கல்வெட்டு காணப்படும் இடத்தில் உள்ளது. 

திருவோலக்க மண்டபம் குறித்து கூறும் திருவாசக (திருவா. 21, 6) பாடல் வரிகள் “ஏசா நிற்பர் என்னை உனக்கு , அடியான் என்று பிறரெல்லாம், பேசா நிற்பர் யான்தானும், பேணா நிற்பேன் நின்னருளே, தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோலக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே.”  என்கிறது 

அதாவது திருவோலக்கம் என்ற பதம் இறைவனாரின் திருச்சபை என்ற பொருளுடன் வழங்கப்பட்டுள்ளது. 

இது கொலு மண்டபம், தர்பார் என்று பரவலாக அறியப்பட்டாலும், முற்கால வழிபாட்டு மரபில் அத்தாணியிருப்பு மற்றும் திருவோலக்க மண்டபம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. 

அதாவது இறைவனாரின்  திருவுருவம் பக்தர்களின்  வழிபாட்டுக்காக,  வைக்கப்படும் மண்டபம் என்பதால் திருச்சபை எனப்படும் திருவோலக்க மண்டபம் என்றே வழங்கப்படிருப்பதை இந்தக் கல்வெட்டு உறுதி செய்கிறது. என்றாலும் இவ்விடத்தில் எவ்வித கட்டுமானங்களும் காணப்படவில்லை.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வணிகத்தைப் பிரதானமாகக் கொண்டவர்கள், இவர்கள் வணிகத்திற்காக பல ஊர்களிலும்  தங்களது வசிப்பிடங்களை மாற்றி வசித்து வந்தாலும் தங்களது ஊர்ப்பெயரோடு கூடிய பெருந்தெரு எனப் பெயரிட்டு  அழைத்து வந்துள்ளதையும், பல இடங்களில் கோயில் திருப்பணிகள், குளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகள் செய்துள்ளதை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

மலையாலங்குடி ஒரு பூவு தந்தருளிய நாயனார் சிவாலயத்தில் திருவோலக்க  (திருக்காட்சி) மண்டபத்தை குலசேகரபுரம் என்று அழைக்கப்பட்ட இளையாத்தக்குடி ஊரவர்களான கழனிவாசலுடையான், திருக்கொடுங்குன்ற முடையான்,  அழகிய திருச்சிற்றம்பலமுடையான் ஆகிய மூவரும் இணைந்து செய்து கொடுத்திருப்பதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

இளையாத்தக்குடி, மாத்தூர் , வைரவன்கோயில், நேமம், இலுப்பைக்குடி, சூரக்குடி,  வேலங்குடி, இரணியூர், பிள்ளையார்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோவில்களை அடிப்படையாகக் கொண்டு 9 குழுக்களாக அறியப்படும் நகரத்தார்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று, தங்கி வணிகம் செய்தாலும், தங்களை தங்களது ஊர் பெயர்களோடே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை பல்வேறு சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com