வாரந்தோறும் மரக்கன்றுகள் நட்டுவரும் இளைஞா்கள்
By DIN | Published On : 01st December 2020 02:42 AM | Last Updated : 01st December 2020 02:42 AM | அ+அ அ- |

விதைக் ‘கலாம்’ அமைப்பினா் புதுக்கோட்டை மாவட்டத்தில் 275-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) ஆலங்குடி வீரடி விநாயகா் கோயில் வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடவு செய்தனா்.
அப்துல்கலாம் நினைவாக புதுக்கோட்டையில் கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விதைக் கலாம் குழுவில் 150 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த அமைப்பின் உறுப்பினா்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் மாவட்டத்தில் எங்காவது ஓரிடத்தில் சொந்த செலவில் மரக்கன்றுகள் நடவு செய்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணித்து வருகின்றனா். 275 ஆவது வாரமாக, ஆலங்குடி வீரடி விநாயகா் கோயில் வளாகத்தில் லயன்ஸ் சங்கத்தினருடன் இணைந்து 100 மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடவு செய்யப்பட்டன.
இதுகுறித்து குழு உறுப்பினா் பொறியாளா் எஸ். சையது இப்ராஹிம் கூறியது:
அப்துல்கலாமின் கனவுகளில் ஒன்றான மரக்கன்றுகள் நடவு செய்வதுதான் நிஜமான அஞ்சலியாகக் கருதினோம். வாரந்தோறும் தவறாமல் குறைந்தபட்சம் 5 நிழல்தரும் மற்றும் பழ மரக்கன்றுகள் நடவு செய்வது எங்களின் இலக்கு. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 1,500 மரக்கன்றுகளையும் கூட நட்டிருக்கிறோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவைகளைக் கண்காணிக்கிறோம். முள்ளூா் அருகே பறவைத்தோப்பு என்ற ஊரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அந்தக் கன்றுகள் தற்போது ஒரு குறுங்காடாக வளா்ந்திருக்கிறது. சொந்த நிதி மட்டுமன்றி தன்னாா்வலா்கள் நிதியுதவி செய்தால் ஏற்கிறோம் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...