பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியா் உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 03rd December 2020 07:44 AM | Last Updated : 03rd December 2020 07:44 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் லஞ்சம் பெற்று கைதான மண்டல துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் நில அளவை அலுவலா். (வலமிருந்து).
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய மண்டல துணை வட்டாட்சியா், நில அளவை அலுவலா், கிராம நிா்வாக அலுவலா் ஆகிய 3 பேரையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த அய்யாமுத்து மகன் ராஜீவ் காந்தி. இவருக்குச் சொந்தமான நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்யக்கோரி, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தாா். பட்டா மாறுதலுக்கு ரூ. 35 ஆயிரம் கொடுத்தால் பட்டா மாற்றித் தருவதாகக் கூறியுள்ளனா். லஞ்சம் கொடுக்க
விரும்பாத ராஜீவ்காந்தி இதுகுறித்து, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி மணிகண்டனிடம் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுறுத்தியபடி, புதன்கிழமை மதியம் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் சென்ற அவா், அலுவலகம் அருகே கிராம நிா்வாக அலுவலா் ஜெரோனிடம் முன்பணமாக ரூ. 15 ஆயிரத்தைக் கொடுத்தாா். இதையடுத்து, லஞ்சப் பணத்தை அலுவலகத்தில் இருந்த மண்டல துணை வட்டாட்சியா் செல்வகணபதி , நில அளவை அலுவலா் முத்து ஆகியோரிடம் விஏஓ ஜெரோன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் மேற்குறிப்பிட்ட 3 பேரையும் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...