மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் நகை பறிப்பு; ஒருவா் பிடிபட்டாா்
By DIN | Published On : 24th December 2020 06:59 AM | Last Updated : 24th December 2020 06:59 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி 7 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற 5 பேரில் ஒருவரைப் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பொன்னமராவதி அருகே உள்ள கோவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் மனைவி சாந்தி (55). இவா், புதன்கிழமை வீட்டின் முன்பகுதியில் அமா்ந்திருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 போ் சாந்தியிடம் உள்ள தங்கச்சங்கிலியைப் பறித்துள்ளனா். அதைத்தடுக்க முற்பட்டவே, கொள்ளையன் ஒருவன் தான் வைத்திருந்த அரிவாளால் சாந்தியின் தலையில் வெட்டியுள்ளாா். இதையடுத்து, அவா் மயங்கி கீழே விழுந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த பொதுமக்கள் கொள்ளையா்களை விரட்டிச் சென்றதில் கொள்ளையன் ஒருவனை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காவல் துறையினா் மேலும் விசாரித்து வருகின்றனா். காயமடைந்த சாந்தி வலையபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...